Thursday, March 29, 2018

பூவரசு


சிறுவயதில் பூவரசு மரத்தின் இலையை சுருட்டி பீப்பீ ஊதி விளையாடி திரிந்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது. அதுபோல், கிராமங்களில் பெண்கள் மார்கழி மாதம் அதிகாலையில் வீட்டிற்கு முன்பு சாணம் கரைத்து நீர் தெளித்து, கோலம் போடுவார்கள். பிறகு அந்த கோலத்தின் நடுவில் மாட்டு சாணத்தை உருட்டி பிள்ளையார் பிடித்து அதில் பூவரசு மரத்தின் பூவை வைத்து கோலத்தின் நடுவில் வைப்பார்கள். அதை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். 

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா [Thespesia populnea (L)].

பூவை ஏன் வைத்தார்கள் என்பது தெரியாது ஆனால் இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை மற்றும் பட்டை அனைத்தும் மருத்துவ குணம் உடையது.

இலை, பூ - பொதுவாக விஷத்தை முறிக்கும் தன்மையுடையது. அதனால் சித்த மருத்துவர்கள் இதன் இலை மற்றும் பூவை பூச்சிக்கடி, விஷ வண்டுக்கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்குக்கு பற்று போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காய் - பூவரசு காயை இடித்து சாறு பிழிந்தால் லேசான பிசுபிசுப்புடன் மஞ்சள் நிறத்தில் பால் போன்று சாறு வரும். இதை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் மறைந்து போகும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை கால் மூட்டு வலிக்கு அருமருந்தாகும்.

பட்டை - பூவரசு மரத்தின் வேர் பட்டையை எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த 50 மிலி தண்ணீருடன் 10 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதி உண்டாகும். இதன் மூலம் தோல் நோயிலிருந்து விடுதலை பெறலாம். செதில் செதிலாக உதிரக்கூடிய சோரியாசிஸ் நோய்க்கு பூவரசம் பட்டை நல்ல மருந்தாகும்.

பூவரசு காய், செம்பருத்தி பூ, பழுத்த பூவரச இலை, இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு புண் ஏற்பட்டால் ஆறவே ஆறாது. இதற்கு பூவரசு பட்டை சிறந்த மருந்தாகும். பட்டையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து பிறகு ஆறிய பின்பு அந்த தண்ணீரை ஊற்றி கழுவி வர புண் குணமாகும்.

ஞாபகம் மறதி நோயுக்கும் இது நல்ல மருந்தாகும்.

இத்தனை நோயுக்கும் அருமருந்தாகும் இந்த மரத்தில் பின்வரும் மருத்துவ குண வேதிப்பொருட்கள் உள்ளன. இது செஸ்க்யூடெர்பின் (Sesquiterpenes) என்ற வகையை சேர்ந்தது. 




பூவரசு மரம் அதிக அளவு பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்றாகும்.

பூவரசு
டாக்டர் சிவராமன்