Thursday, August 31, 2017

ஐயமிட்டு உண் - ஐஸா ஃபாத்திமா ஜாஸ்மின்


ஐஸா ஃபாத்திமா ஜாஸ்மின் ஒரு விவசாயி மகள், இவர் படித்து பல் மருத்துவராக பணிபுரிகிறார். இவர் ஆரம்பித்திருக்கும் செயல் மிகவும் பாராட்டுக்குரியது.

அப்படி என்ன செய்தார்.......

திருவான்மியூரை சேர்ந்த இவர், பெசன்ட் நகரிலுள்ள ஒரு பொது இடத்தில் குளிர்சாதனப்பெட்டியை வைத்து அதில் வீடுகளில் மிச்சமாகும் உணவுப்பொருட்களை வைக்கிறார். அதனால் அவ்வழியே வரும் ஏழை மக்கள் தங்களுடைய பசியை போக்கி கொள்கின்றனர். இப்படி செய்வதன் மூலம் வீடுகளிலோ திருமணம் மண்டபங்களிலோ மிச்சமாகும் உணவுகளை குப்பையில் கொட்டாமல் பசியோடு இருப்பவர்களுக்கு கொடுத்து பசியாற்றலாம். 

இது மட்டுமல்லாமல், உணவோடு பழைய புத்தகம், துணிமணிகள் போன்றவற்றையும் வைத்திருக்கிறார். இதனை பார்த்து மற்றவர்களும் அவர்களுக்கு தேவையில்லாதவைகளை, மற்றவர்கள் உபயோகிக்க கூடிய பொருட்களை இங்கு வைத்துவிட்டு செல்கிறார்கள். 

இது மிகவும் போற்றுதலுக்கு உரிய செயலாகும். இது மேலும் மேலும் வளர மக்களின் பேராதரவு தேவை.

இந்த அரிய பணி சிறக்கட்டும்!!

Sunday, August 6, 2017

மறந்துபோன (மறக்கடிக்கப்பட்ட) விஞ்ஞானி - எல்லப்பிரகடா சுப்பாராவ் (Yellapragada SubbaRow)


திரு சுப்பாராவ் அவர்கள் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் பீமாவரம் என்ற பகுதியில் (இப்பொழுது ஆந்திராவில் உள்ளது) பிறந்தவர். இவர் வாழ்ந்த காலம் 12 ஜனவரி 1895 முதல் 8 ஆகஸ்ட் 1948 வரை, அதாவது 53 வருடங்கள் வாழ்ந்தவர்.  இந்த குறுகிய காலத்தில் மருத்துவ உலகில் அளப்பரிய சாதனைகள் பல படைத்தவர். 

இவருடைய பள்ளிப்படிப்பு இராஜமுந்திரியிலும், கல்லூரிப் படிப்பு சென்னை மருத்துவக் கல்லூரியிலும் முடிந்தது. மேலும் உயர்படிப்பிற்கு அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திற்கு 12 அக்டோபர் 1922 ஆம் ஆண்டு சென்றார். 

அங்கு அவர் கண்டுபிடித்த சாதனைகள் பல, அவற்றில் சிலவற்றை நினைவு கூறுவோம்.

இவர் உயிர்வேதியல் (Biochemistry) துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அத்துறையில் உள்ள நிபுணத்துவத்தின் அடிப்படையில் நம் உடலில் உள்ள "பாஸ்பரஸ்" (Phosphorus) கனிமத்தை அளவிடக்கூடிய வழிமுறையை கண்டுபிடித்தார். இன்றளவும் அம்முறையை "ஃபிஷ்கி & சுப்பாராவ்" பாஸ்பரஸ் கண்டுபிடிக்கும் வழிமுறை என்றே அழைக்கப்படுகிறது.


இவருடைய கண்டுப்பிடிப்புக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நம் உடலில் ஆற்றல் எப்படி தேக்கி வைக்கப்படுகிறது மற்றும் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரைடு செரிமானத்திற்கு பின்பு குளூக்கோஸ் மற்றும் ஆற்றலாக வெளிப்படுகிறது. ஆற்றலின் வெளிப்பாடு அடினோசின் ட்ரை பாஸ்பேட் (ATP) என்று அழைக்கப்படும். இந்த சங்கிலி செயல்முறையை வெளிக்கொணர்தலில் இவரின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இது மட்டுமில்லை, நம் உடலில் வைட்டமின் பி9 (Vitamin B9) இருப்பதையும் இதன் குறைபாடு இரத்தசோகை என்ற நோயை உண்டாக்கும் என்பதையும் கண்டறிந்தார். முக்கியமாக கர்ப்ப காலத்தில் தாய்க்கு இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் அது குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். வைட்டமின் பி9 யின் இன்னொரு பெயர் போலிக் ஆசிட் (Folic Acid) என்பதாகும். 


இவருடைய வைட்டமின் பி9 கண்டுபிடிப்பு மற்றுமொரு மருந்து கண்டுபிடிப்பிற்கு உறுதுணையாக இருந்தது. அது இரத்தப் புற்றுநோயுக்கு பயன்படுத்தப்படும் மீதோட்ரெக்ஷேட் (Methotrexate) என்ற மருந்தாகும். 
  

மற்றுமொரு அறிய கண்டுபிடிப்பு நாம் இன்றளவும் பயன்படுத்தும் ஹெட்ரஸான் (Hetrazan) என்று அழைக்கப்படும் டைஎத்தில் கார்ப்பமசின் (Diethylcarbamazine) என்ற மருந்தாகும். இது ஃபைலாரியாஸிஸ் (Filariasis) என்ற நோயுக்கு அருமருந்தாகும். இந்த நோயை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் நம் கால்கள் யானை கால் (Elephantiasis) போன்று பருத்துவிடும்.



கடைசியாக இவர் கண்டுப்பிடிப்புக்களில் ஆகச் சிறந்தது ஆரியோமைசின் (Aureomycin) என்றழைக்கப்படும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்தாகும். இது "ரிக்கெட்ஷியா" (Rickettsia) நோயை குணப்படுத்தும் வல்லமையுடையது. இன்றளவும் உபயோகத்தில் உள்ளது.


இவ்வளவு கண்டுபிடிப்புக்களை செய்து நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாத்தவரின் பெயர் இதுவரை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படவும் இல்லை, அது மாதிரி மற்ற மதிப்பு மிக்க பரிசுகளை கொடுத்து கௌரவிக்கப்படவும் இல்லை. நம் இந்திய அரசும் இதுவரை உயரிய விருது கொடுத்து கௌரவிக்கவும் இல்லை. 

அதனால், நாம் திரு சுப்பாராவ் அவர்களின் நினைவு நாள் 8 ஆகஸ்ட் ஐ நினைவு கூர்ந்து அவரை போற்றுவோம்.


Wednesday, August 2, 2017

தமிழர்கள் அறிவு - பித்தகோரஸ் தேற்றம் (Pythagoras Theorem) முன்னோடி



பித்தகோரஸ் ஒரு கிரேக்க விஞ்ஞானி மற்றும் கணிதமேதை ஆவார். இவர் வாழ்ந்த காலம் கி.மு.  570 - கி.மு. 495 ஆகும். இவர்தான் முக்கோணவியலின் முன்னோடி, இவர் கண்டுபிடித்தது தான் பித்தகோரஸ் தேற்றம் என்று அழைக்கப்படும். 

ஆனால் இவர் பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே கோதையனார் என்பவர் முக்கோணவியலின் தத்துவத்தை பாடலாக எழுதியுள்ளார். அந்த பாடல் 

ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறாக்கி 
கூறதில் ஒன்றைத் தள்ளி 
குன்றத்தில் பாதி சேர்த்தால் 
நீட்டிய கர்ணந் தானே!
- கோதையனார் 

இதன் பொருள்:

முக்கோணத்தின் கர்ணம் கண்டுப்பிடிக்க, நீளத்தை எட்டால் வகுத்து, கிடைப்பதை நீளத்தில் கழித்து, செங்குத்து உயரத்தில் பாதியை இதோடு சேர்த்தால் கர்ணம் கிடைக்கும்.

உதாரணம்


மேலே உள்ள முக்கோணத்தின் நீளம் 8; உயரம் 6; இதன் கர்ணம் எத்தனை? 

நீளத்தை எட்டால் வகுத்தால் கிடைப்பது 1, இதை நீளத்தில் கழித்தால் 8 - 1 = 7; இத்துடன் உயரத்தில் பாதியை சேர்த்தால் 7 + 3 = 10; இதுதான் கர்ணத்தின் அளவு ஆகும்.

இதை பித்தகோரஸ் சூத்திரத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம் 


இதன் மூலம் நம்முடைய பெருமையை நாம் உணரலாம். 

Tuesday, August 1, 2017

இக்காலத்து திரௌபதி - ஒரு ஆச்சரியம்


ரஜோ வர்மா (வயது 23) மிகவும் ஆச்சரியப்படுத்திய பெண் ஏனென்றால் இவர் 5 சகோதர்களை மணந்து கொண்டவர். இவர் டெஹ்ராடூன் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். 


இனிய குடும்பம்: கணவர்கள் (புஜ்ஜு வர்மா (35), சந்த் ராம் வர்மா (31), கோபால் வர்மா (29), குட்டு வர்மா (24), தினேஷ் வர்மா (22) 

இச்செய்தியை காணும் பொழுது நமது இதிகாசம் மகாபாரதம் திரௌபதியை தான் நினைவூட்டுகிறார். மகாபாரதம் போற்றுவதற்கு உரியது என்றால் ரஜோ வர்மா செய்ததும் சரியே!

ஆனால் இதற்கு முக்கிய காரணம், இக்கிராமத்தில் ஆண்கள் பெண்கள் விகிதம் சரி சமமாக இல்லை. இங்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதே அரிது. மேலும் இவர்கள் குடும்பம் சகிதமாக சிறு சிறு நிலப்பரப்பில் விவசாயம் செய்து பிழைப்பவர்கள். அதனால் விளைநிலங்களை பிரிக்காமல் ஒன்றாக சேர்ந்து விவசாயம் செய்வார்கள். இக்கிராமத்தில் பல குடும்பங்களில் இதுபோல் ஒரு பெண் 2 அல்லது 3 சகோதர்களை திருமணம் செய்து குடித்தனம் பண்ணுவது சகஜமாக இருக்கிறது.



இவர்களுக்கு அழகான ஒரு குழந்தை உள்ளது. ஒரே ஒரு நெருடல் என்னவென்றால் இக்குழந்தையின் உண்மையான தந்தை யார் என்று தெரியவில்லை, இதை ரஜோ வர்மாவே சொல்லியிருப்பது தான்.

இக்குடும்பம் வாழ்க பல்லாண்டு!!