Friday, July 29, 2022

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். 2021-22 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 போட்டிக்கு தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் 8 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள். அவர்களில் இருந்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 போட்டியில் பங்கு பெற்றார்கள். இந்த நிகழ்ச்சிக்கு திரு சங்கர் மஹாதேவன், திருமதி கல்பனா ஒரு அணிக்கு தலைவர்களாகவும் (டான் தாதா அணி), மற்றொரு அணிக்கு திருமதி சித்ரா, திரு சரண் தலைவர்களாகவும் (ரௌடி பேபி அணி) இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை திரு மா கா பா ஆனந்த், திருமதி பிரியங்கா தொகுத்து வழங்கினார்கள் (திருமதி மைனா முதல் 8 வாரங்களுக்கு மா கா பா ஆனந்துடன் தொகுத்து வழங்கினார்).

இந்த இரண்டு அணிகளும் குழந்தைகளை தங்கள் அணிக்கு தேர்ந்தெடுத்த நிகழ்வு மிகவும் சுவாசியமாக இருந்தது. சிறந்த முறையில் பாடும் குழந்தைகளை தங்கள் அணிக்கு  கொண்டு வருவதற்கு பள்ளியில் மணி அடிப்பது போல் முதலில் சென்று யார் மணியை அடிக்கிறார்களோ அந்த அணிக்கு தேர்வானார்கள். இந்த முறையில் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு அணிக்கும் நான்கு சந்தர்ப்பங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மீதமிருக்கும் போட்டியாளர்கள் அவரவர் விருப்படி எதாவது ஒரு அணியில் சேர்ந்து கொண்டார்கள். இவ்வாறாக அணிக்கு 10 போட்டியாளர்கள் வீதம் பிரிந்து, அணிக்கு ஒருத்தொருத்தர் நேருக்கு நேராக பாடல் பாடி மோதிக் கொண்டார்கள். போட்டியாளர்களில் தீபன் நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாடினார். இவர் சினிமா பாடலை பாடாதவர். மோசஸ் மிகச்சிறந்த புல்லாங்குழல் வித்துவான். சினிமா பாடல்களையும் சிறப்பாக பாடுவார். போட்டியாளர்களிலே ஆத்யா தான் வயதில் மிகக்குறைந்தவர். 6 வயதுதான் ஆகிறது, ஆனால் அனைவருக்கும் கடினமான போட்டியை கொடுத்தார்.

இந்த போட்டியில் சுவாரஸ்யமாக பல விதமான சுற்றுகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டார்கள். நாட்டுப்புறப்பாடல்கள், தெய்வீகப்பாடல்கள், நடன சுற்று பாடல்கள், நடிகர்கள் விஜய், அஜீத், ரஜினி, கமல் படப்பாடல்கள், பிடித்தமானவர்களுக்கு சமர்ப்பிக்கும் பாடல்கள், A R ரகுமான் பாடல்கள், இளையராஜா பாடல்கள் என்று வித விதமான சுற்றுகள். மேலும் பண்டிகை காலங்களில் மிகவும் சிறப்பான பாடல் நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அனைத்திற்கும் மேலாக கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியும், A R ரகுமான் அவர்களின் மூப்பில்லா மொழி தமிழ் பாடல் அறிமுக நிகழ்ச்சியும் மறக்க முடியாதது. 

போட்டியாளர்கள் 20 பேரிலிருந்து ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களில் குறைந்த மதிப்பெண் பெறுபவர்கள் ஒவ்வொரு அணியிலிருந்தும் நியமனம் செய்யப்பட்டு மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள். அந்த இரண்டு பேருக்கும் மக்களிடம் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கப்படும். அதில் யார் அதிக ஓட்டுகள் வாங்குகிறார்களோ அவர்கள் அடுத்த சுற்றுக்கு போவார்கள். மற்றவர் போட்டியில் இருந்து வெளியேறிவிடுவார். இவ்வாறாக 20 பேரிலிருந்து முதல் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த சுற்று மாபெரும் நிகழ்வாக நடத்தப்பட்டது. 

இந்த 10 பேரிலிருந்து 7 பேர் அடுத்த கட்டத்திற்கு தேர்வானார்கள். இந்த தடவை  புதிதாக ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் நன்றாக பாடக்கூடியவர்கள் ஏதோ ஒரு பிழையினால் வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் அழைத்து (8 பேர்) பாடுவதற்கு வாய்ப்பு தரப்பட்டது (Wild Card Contestants). அதிலிருந்து ஒரே ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு போனார். அவ்வாறு தேர்தெடுக்கப்பட்டவர் அபுதாபியில் இருந்து கலந்து கொண்ட அபினா ஆவார். 

ஏற்கனவே தேர்வாகியிருந்த 7 பேர் மற்றும் சிறப்பு வாய்ப்பில் தேர்வான ஒருவர் என மொத்தம் 8 பேர் அடுத்த சுற்றுக்கு தயாரானார்கள். இவர்களில் இருந்து ஒருவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்வானார். அந்த வெற்றி பெற்ற நபர் ட்ரினிடா, பெங்களூரில் இருந்து வந்தவர். மீதமுள்ள 7 பேரில் 5 பேர் அரையிறுதி சுற்றுக்கு தேர்வானார்கள். 5 பேரில் இருந்து 4 பேர் இறுதிசுற்றுக்கு தேர்வாகி, ஆக மொத்தம் 5 பேர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாபெரும் இறுதி சுற்றுக்கு தேர்வானார்கள். 


ஜூன் 26 ஆம் தேதி மக்கள் முன்னிலையில் (உள்ளரங்கில்) மாபெரும் இறுதி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் நடுவர்களின் மதிப்பெண் மற்றும் மக்களின் ஓட்டுகள் எண்ணிக்கை அடிப்படையில் பட்டத்தை வெல்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியில் கிரிஷாங் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 பட்டத்தை வென்று 60 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் பெற்றார். இரண்டாவதாக ரிஹானாவும், மூன்றாவதாக நேஹாவும் வெற்றிபெற்றார்கள். ட்ரினிடா மற்றும் அபினா முறையே 4 மற்றும் 5 வது இடத்தை பிடித்தார்கள். 


இறுதிச்சுற்றில் கிரிஷாங் மற்றும் நேஹா இருவருக்கும் தான் கடினமான போட்டி இருந்தது. நடுவர்கள் மட்டும் தேர்ந்தெடுத்து இருந்தால் நேஹா இரண்டாவது இடத்தை பிடித்திருப்பார். இவர்தான் இந்த வருடம் நடந்த  போட்டிகளில் அதிகமுறை சிறந்த குரலுக்கான பரிசை வென்றவர். மக்கள் ஓட்டு எண்ணிக்கையில் ரிஹானா இரண்டாவது இடத்தை பிடித்து விட்டார். இவர் பார்வையாளர்களை தன் பாடலில், நடன அசைவில், கவர்ச்சி குரலில் அனைவரையும் மெய்மறக்க செய்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துபவர், மிகச்சிறந்த  திறமைசாலி.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி: விஜய் டிவி