Saturday, May 25, 2019

இந்திய ஜனநாயக திருவிழா 2019

இந்திய ஜனநாயக திருவிழா 2019, ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து மே 23 ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. 


மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு (வேலூர் தொகுதி நீங்கலாக) தேர்தல் நடைபெற்றது. இம்முறை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சிறு தாமதம் ஆனது, ஏனென்றால் தொகுதிக்கு 5 VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு அது ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுடன் ஒத்து போகுதா என்று சரி பார்க்கப்பட்டது.

இம்முறையும் மக்கள் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்து மீண்டும் திரு மோடி அவர்களை பிரதமராக தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றிப் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.



இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழ் நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், பஞ்சாப் நீங்கலாக மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி பெருவாரியாக வெற்றிப் பெற்றுள்ளது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவிலும் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்துள்ளது. 
  
தமிழ் நாடு இந்த தடவையும் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தனித்தன்மையுடன் விளங்குகிறது. 2014 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 37 இடங்களில் தனித்து வெற்றிப் பெற்றது. இந்த முறை (2019) திராவிட முன்னற்ற கழகத்தின் கூட்டணி 37 இடங்களில் அமோக வெற்றிப் பெற்றுள்ளது. வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றியடைந்துள்ளது. தேனி தொகுதியில் திரு பன்னீர்செல்வம் அவர்களுடைய மகன் திரு இரவீந்திரநாத் வெற்றிப் பெற்றுள்ளார். பிஜேபி போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. 

தமிழ் நாட்டில் கள்ளக்குறிச்சியையும் சேர்த்து மொத்தம் 33 மாவட்டங்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பது விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து 33 ஆவது மாவட்டமாக உதயமானது. இந்த அறிவிப்பை முதலமைச்சர் திரு பழனிச்சாமி அவர்கள் 8 ஜனவரி 2019 அன்று அறிவித்தார். 


33 மாவட்டங்கள் உள்ள தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.


தமிழகத்தைப் பொறுத்தவரை 5 முனைப் போட்டியாக இருந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமுமுக கூட்டணி, மக்கள் நீதி மையம் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என்று வேட்பாளர்கள் களத்தில் நின்று போட்டியிட்டார்கள். முக்கியமாக நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் 20 ஆண் வேட்பாளர்களையும், 20 பெண் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியிருந்தது.


தமிழக மக்கள் எப்பவும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டளித்து பழக்கப்பட்டவர்கள் என்பதனால் இம்முறை திமுகவுக்கு ஓட்டளித்து அமோக வெற்றிப் பெற வைத்துள்ளார்கள். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவின் பெருவாரியான வாக்குகளைப் பிரிப்பார்கள் என்று நினைத்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள்.


மக்கள் நீதி மையம் 10 இடங்களில் 5 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக நான்கு இடங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள். நாம் தமிழர் கட்சி 8 இடங்களில் 5 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ளனர். இது தமிழக இளைஞர்களின் மனநிலை புதிய கட்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் அதன் சதவீதம் 


தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், பட்டை வரைபடத்தில் (Bar Chart) கொடுக்கப்பட்டுள்ளது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திரு இரவிக்குமார், மதிமுகவை சேர்ந்த திரு கணேசமூர்த்தி, ஐக்கிய ஜனநாயக கட்சியை சேர்ந்த திரு பாரிவேந்தர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த திரு சின்னராஜ் ஆகிய அனைவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்கள்.

அதுபோல் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த திரு கிருஷ்ணசாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

பாராளுமன்றத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 தேதி தேர்தல் நடைப்பெற்றது. திமுக சார்பாக திரு துரைமுருகன் அவர்களின் மகன் திரு கதிர் ஆனந்த் அவர்களும், அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் திரு சண்முகம் அவர்களும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருமதி தீபலட்சுமி அவர்களும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவு ஆகஸ்ட் 9 தேதி வெளியிடப்பட்டது. வேலூர் தொகுதியில் திமுகவின் திரு கதிர் ஆனந்த் அவர்கள் திரு சண்முகம் அவர்கள் பெற்ற வாக்குகளை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்: திரு கதிர் ஆனந்த் (4,85,340 வாக்குகள், 47.38%), திரு சண்முகம் (4,77,199 வாக்குகள், 46.58%), தீபலட்சுமி (26995 வாக்குகள், 2.63%) மற்றும் நோட்டா (9417 வாக்குகள், 0.92%). இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 10,24,352. தொகுதியில் உள்ள மொத்த வாக்குகள் 14,32,555.

நன்றி: The Hindu, ECI, Wikipedia