Wednesday, May 26, 2021

ரெம்டெசிவிர் (Remdesivir)


இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்சமயம் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்துக்காக மக்கள் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள், காரணம் கொரோனா இரண்டாம் அலை, இந்தியா முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் அலையில் உருமாற்றம் அடைந்த கோவிட்-19 (COVID-19) வைரஸ் மிக வேகமாக பரவி நிறைய மக்களுக்கு தொற்றை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் மக்களின் இறப்பு விகிதமும் அதிகமாக தென்படுகிறது. 

சில நபர்களுக்கு இந்நோய் தீவிரமாக தாக்கி அவர்களின் உடல்நிலையை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கி மருத்துவமனையில் சேர்க்கும் நிலையை உண்டுபண்ணுகிறது. அந்த சமயத்தில் அந்நோயாளிகளை காப்பாற்ற பிராணவாயு செலுத்தி, ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்தையும் கொடுத்து சிலரை காப்பாற்றுகிறார்கள். இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவோரிடம் அங்கிருக்கும் மருத்துவர்கள் இந்த மருந்தை வாங்கி வரச்சொல்கிறார்கள். அதுபோல் அரசு மருத்துவமனையிலும் இந்த மருந்து தட்டுப்பாடு இருப்பதால் வெளியில் உள்ள மருந்துக்கடையில் தான் வாங்க சொல்கிறார்கள். ஆகையால் ஒரே நேரத்தில் நிறைய மக்கள் இந்த மருந்தை வாங்குவதனால் இப்பொழுது மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

உண்மையில் இந்த மருந்து கோவிட்-19 (COVID-19) வைரஸ் நோயுக்குத்தான் கண்டுப்பிடிக்கப்பட்டதா? இல்லை வேற நோயை குணப்படுத்த தயாரிக்கப்பட்டதா என்பதை இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சி வரலாற்றை பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கோவிட்-19 (COVID-19) தாக்கம் உலகம் முழுவதும் இருப்பதால் மருத்துவ உலகம் இந்த நோயை உண்டுபண்ணும் வைரஸின் மூலக்கூறுகளை ஆராய்ந்து அதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று ஆராய்ச்சி செய்தது. அந்த ஆராய்ச்சியில் இதன் மரபணு கூறுகள் 79.5 சதவீதம் சார்ஸ்-கோவி-1 (SARS-COV-1; Severe Acute Respiratory Syndrome-Corona Virus-1) என்ற வைரஸின் மூலக்கூறுகளை ஒத்து இருந்தது மேலும் இதன் புரதக்கூறுகள் (Amino Acids Sequence) 94.6 சதவீதம் ஒத்துப்போயிருந்தது. சார்ஸ்-கோவி-1 வைரஸ் 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது, அது தீவிர நோய் பரவலை (Outbreak) ஏற்படுத்தி ஆசியக்கண்டத்தை ஆட்டிப்படைத்தது. அதுவும் கோவிட்-19 மாதிரி நுரையீரலை தாக்கி பெரிய சுவாசக்கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி உயிரை கொன்றது.

அப்போது அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் (Center for Disease Control and Prevention, CDC), கனடாவில் உள்ள தேசிய நுண்ணுரியல் ஆய்வகமும் (National Microbiology Laboratory, NML) சேர்ந்து ஆராய்ச்சி செய்து சார்ஸ்-கோவி-1 வைரஸின் மரபணு கூறுகளை (Genome) ஏப்ரல் 2003 ல் கண்டுப்பிடித்து இவ்வுலகிற்கு அறிவித்தது. 

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இதே மாதிரி சவூதி அரேபியாவில் பெரும் தொற்று ஏற்பட்டு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா என்று 27 நாடுகளுக்கு பரவியது. அதுவும் இதே மாதிரி நோய் அறிகுறிகளை தான் கொண்டிருந்தது. அதற்கு மெர்ஸ்-கோவி (MERS-COV; Middle East Respiratory Syndrome-Corona Virus) வைரஸ் என்றழைக்கப்பட்டது.

2013 ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய ஆப்பிரிக்காவில் புதுவித வைரஸ் நோய் பரவியது. அது மனிதர்களுக்கு கடுமையான உயிரை கொல்லும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தியது. இந்த வைரஸின் பெயர் எபோலா (Ebola) வைரஸ் (Zaire Ebolavirus). இதுவும் தீவிரமாக பல நாடுகளுக்கு பரவியது.

2019 ல் ஏற்பட்ட வைரஸின் தாக்கம் சார்ஸ்-கோவி-1 நோயை ஒத்து இருந்ததாலும் அதன் புரதக்கூறுகள் 94.6 சதவீதம் ஒத்துப்போனதாலும் இந்த வைரஸூக்கு சார்ஸ்-கோவி-2 (SARS-COV-2; Severe Acute Respiratory Syndrome-Corona Virus-2) என்று பெயரிடப்பட்டது. COVID-19 என்பது கொரோனா வைரஸ் நோய் (Corona Virus Disease)-2019 என்பதின் சுருக்கமாகும்.

அடுத்தடுத்து உலக நாடுகள் இந்த கொரோனா வைரஸ் நோய்களுக்கு உள்ளாவதால் இதை கட்டுப்படுத்த மருத்துவ உலகம் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது. அதன் பயனாக மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில மருந்துகள் இன்னும் ஆராய்ச்சி (Phase-2 or Phase-3) நிலையில் தான் இருக்கின்றன. அந்த மாதிரி ஆராய்ச்சி நிலையில் இருக்கும் ஒரு மருந்து தான் ரெம்டெசிவிர் (Remdesivir) ஆகும்.

பொதுவாக ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் ஒரு மருந்தை இன்னொரு நோயுக்கு அல்லது புதிதாக உருவான நோயுக்கு பயன்படுத்துவதை மறுபயன்பாடு (Repurposing) என்று அழைப்பார்கள். உதாரணமாக தலிடோமைடு (Phthalidomide) என்ற மருந்து (Drug) பெண்களின் கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை (Morning sickness) தடுப்பதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. அந்த மருந்தை உட்கொண்டவர்களின் குழந்தைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கை கால் வளர்ச்சி இன்றி பிறந்தன. அதற்கு போக்கோமிலியா (Phocomelia) என்று பெயர். அதன்பிறகு அந்த மருந்தை தடை செய்தார்கள்.


இதே மருந்து பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இப்பொழுது தொழுநோயுக்கும் (Leprosy) மற்றும் புற்றுநோயுக்கும் (Multiple myeloma) சில முன்னெச்சரிக்கையுடன் பரிந்துரைக்கப்படுகிறது. அதுமாதிரி ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்தும் முதன்முதலில் எபோலா (Ebola) வைரஸ் நோயை குணமாக்குவதற்காக க்ளீயாட் சயின்ஸஸ் (Gilead Sciences) என்ற மருந்து கம்பெனியால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த மருந்து எதிர்பார்த்த செயல்திறனை (Efficacy) பெற்றிருக்கவில்லை என்று தரக்கட்டுப்பாட்டு துறையால் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. 

அதேசமயம் இந்த மருந்து சார்ஸ்-கோவி-1 மற்றும் மெர்ஸ்-கோவி வைரஸ் நோய்களுக்கு எதிராக ஆய்வுக்கூடிய (In vitro) முறையிலும், உயிருள்ள சிறிய விலங்குகளிலும் (In vivo) பரிசோதிக்கப்பட்ட போது உறுதியளிக்கும் வகையில் முடிவுகள் கிடைத்தன. மேலும் இந்த மருந்து இன்னும் 3 ஆவது கட்ட (Phase-3) பரிசோதனையில் தான் உள்ளது. 

ரெம்டெசிவிர் மருந்து நியூக்ளியோசைடு (Nucleoside) தடுப்பான் (Inhibitors) வகையை சேர்ந்ததாகும். இந்த வகை மருந்துகள் ஏற்கனவே புற்றுநோயை குணப்படுத்தவும் மற்றும் வைரஸினால் ஏற்படும் தொற்று நோய்களை (HIV, HBV, HCV, HSV, CMV, VZV) குணப்படுத்தவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகள் எயிட்ஸ் (AIDS) மற்றும் ஹெபடைடிஸ் பி (Hepatitis B) நோய்களை குணப்படுத்த உதவுகிறது.  

 


கொரோன வைரஸ் என்பது நேர்மறையான தனித்த இழை RNA [(+) single strand RNA (+ssRNA)] வகையை சேர்ந்ததாகும். இது நமது உடலில் மூக்கு வழியாகவோ அல்லது வாய் மூலமாகவோ உட்புகுகிறது. அதன் பிறகு இதிலுள்ள முள் (spike) போன்ற புரதம் (Protein) நம் உடலில் உள்ள ACE 2 (Angiotensin Converting Enzyme 2) ஏற்பி (Receptor) உடன் ஒட்டிக்கொண்டு நம்முடைய செல்லுக்குள் (Cell) செல்கிறது. அப்புறம் எண்டோசோம் (Endosome) க்கு இடமாற்றம் (Translocated) பெற்று அங்குள்ள புரோட்டியேஸ் (Protease enzyme) நொதி மூலம் முள் புரதம் (Spike protein) பிளவு (Cleave) ஏற்பட்டு வைரஸின் மரபணு (Virus genome) வெளியேறி பாலிப்ரோட்டின்ஸ் (Polyproteins, PP1a & PP1b) ஆக மாறுகிறது. இந்த பாலிப்ரோட்டின்ஸ், RdRp (RNA dependent RNA polymerase) நொதி (Enzyme) மூலம் புது வைரல் மரபணுவாக (Viral genome) பிரதிபலிக்கிறது (Replication). பிறகு நம் செல்லில் உள்ள எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலம் (Endoplasmic reticulum) மூலம் உருவாகும் முள் புரதத்தையும் (Spike protein) மற்றும் கட்டமைப்புக்கான (Structural) மற்ற புரதங்களையும் (proteins) சேர்த்து புது வைரஸாக செல்லில் (Cell) இருந்து வெளியேறுகிறது (exocytosis). இவ்வாறு கொரோனா வைரஸ் நம் உடலுக்குள் சென்று புது வைரஸாக மாற 6 படிநிலைகளை கடந்து பெருகுகிறது (Multiplication).  


இந்த 6 படிநிலைகளில் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து 4ஆம் படிநிலையான RdRp (RNA dependent RNA polymerase) நொதியின் (enzyme) செயல்பாட்டை தடுக்கிறது. ஏனென்றால் இந்த நொதி (enzyme) வேலை செய்வதற்கு ATP (Adenosine Triphosphate) என்ற நியூக்ளியோடைடு (Nucleotide) மிகவும் அவசியமாகும். இந்த நியூக்ளியோடைடு (Nucleotide) RdRp நொதியுடன் சேர்ந்து புது மரபணுவை உண்டுபண்ணும்.


பொதுவாக ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து என்பது ஒரு சார்பு மருந்து (Prodrug) வகையை சேர்ந்தது. இதற்கென்று தனித்த மருத்துவ குணம் கிடையாது. இது நமது உடம்பில் சென்ற பிறகு தான் வளர்சிதை (Metabolise) மாற்றம் அடைந்து உண்மையான மருந்தாக மாறுகிறது. ஏனென்றால்  நியூக்ளியோசைடு (Nucleoside) தடுப்பான் (Inhibitors) மருந்துகளை அவ்வளவு சீக்கிரம் நம் உடலால் உறிஞ்சிக்கொள்ள (Absorption) முடியாது. அதற்காக உண்மையான மருந்தை (Drug) சார்பு மருந்தாக (Prodrug) மாற்றி நம் உடலில் செலுத்துவார்கள். அது நமது உடலில் நியூக்ளியோடைடு (Nucleotide) ஆக மாற்றம் பெற்று ATP (Adenosine Triphosphate) வடிவமைப்புக்கு ஒத்ததாக மாறுகிறது.


ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து ATP (Adenosine Triphosphate) வடிவமைப்புக்கு ஒத்து உள்ளதால் இம்மருந்து RdRp (RNA dependent RNA polymerase) நொதியுடன் (enzyme) சேர்ந்து புது மரபணு உண்டுபண்ணுவதை தடுத்து விடுகிறது.


இப்பொழுது அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Center for Disease Control and Prevention, CDC) இந்த மருந்தை பரிந்துரை (Recommendation) பட்டியலில் (List) இருந்து எடுத்து விட்டது. இதனுடைய செயல்திறன் (efficacy) என்பது மிகவும் குறைவுதான், மேலும் இது அனைத்து மக்களுக்கும் உபயோகமானதாக இல்லை. 

தற்சமயம் கொரோனா சிகிச்சை முறையை மூன்றாக பிரித்துள்ளார்கள். முதல்நிலையில் இந்த வைரஸ் மூக்கு தொண்டை பகுதியில் இருக்கும். அப்போது காய்ச்சல்,  உடல்வலி, மூக்கு ஒழுகுதல், சுவை மறத்து போதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இது 1-5 நாட்கள் இருக்கும். உடலில் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த நிலையிலே நோய் சரியாகி  விடும், மாத்திரை மருந்து தேவையில்லை. 85 சதவீதம் மக்கள் இப்படி குணமாகி விடுகிறார்கள். மீதம் இருக்கும் 15 சதவீதம் மக்கள் அடுத்த கட்டப்பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இரண்டாம் நிலை என்பது அடுத்த 6-9 நாட்களுக்குள் ஏற்படக்கூடிய நுரையீரல் பாதிப்பு ஆகும். இந்த நிலையில் மருத்துவர்கள் கார்டிகோஸ்டிராய்டு (Corticosteroids) மருந்துகளை கொடுத்து குணப்படுத்தி விடுகிறார்கள். இதற்கு அடுத்த கட்டம் (மூன்றாவது நிலை) நோய் மிகவும் முற்றின வகையை சேர்ந்ததாகும் (10 தினங்களுக்கு மேல்). இதில் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இது பொதுவாக வைரஸினால் ஏற்படக்கூடியது கிடையாது. மாறாக இது நம் உடலில் ஏற்படும் எதிர்ப்பு சக்தினால் தோன்றக்கூடியது. இதற்கு சைட்டோகைன் (Cytokine) ஸ்டார்ம் (Storm) என்று அழைப்பார்கள். இந்த சமயத்தில் தான் நோயாளிகளுக்கு பிராணவாயு மற்றும் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து மற்றும் பிற உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. 

ஆகையால் கொரோனா நோய் தொற்று கண்டறிந்தவர்கள் மருத்துவரிடம் முறையான சிகிச்சையை காலம் தாழ்த்தாமல் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் முகக்கவசம் அணிந்து இந்நோய் வராமல் தடுப்பதுதான் மிகச்சிறந்த வழிமுறையாகும். அப்புறம், தடுப்பூசி கிடைத்தால் உடனே போட்டுக்கொண்டு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நன்றி: 
ACS Central Science 2020 6 672
European Journal of Medicinal Chemistry 2020 201 112527
MedChemComm 2019 10 200