திரு சுப்பாராவ் அவர்கள் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் பீமாவரம் என்ற பகுதியில் (இப்பொழுது ஆந்திராவில் உள்ளது) பிறந்தவர். இவர் வாழ்ந்த காலம் 12 ஜனவரி 1895 முதல் 8 ஆகஸ்ட் 1948 வரை, அதாவது 53 வருடங்கள் வாழ்ந்தவர். இந்த குறுகிய காலத்தில் மருத்துவ உலகில் அளப்பரிய சாதனைகள் பல படைத்தவர்.
இவருடைய பள்ளிப்படிப்பு இராஜமுந்திரியிலும், கல்லூரிப் படிப்பு சென்னை மருத்துவக் கல்லூரியிலும் முடிந்தது. மேலும் உயர்படிப்பிற்கு அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திற்கு 12 அக்டோபர் 1922 ஆம் ஆண்டு சென்றார்.
அங்கு அவர் கண்டுபிடித்த சாதனைகள் பல, அவற்றில் சிலவற்றை நினைவு கூறுவோம்.
இவர் உயிர்வேதியல் (Biochemistry) துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அத்துறையில் உள்ள நிபுணத்துவத்தின் அடிப்படையில் நம் உடலில் உள்ள "பாஸ்பரஸ்" (Phosphorus) கனிமத்தை அளவிடக்கூடிய வழிமுறையை கண்டுபிடித்தார். இன்றளவும் அம்முறையை "ஃபிஷ்கி & சுப்பாராவ்" பாஸ்பரஸ் கண்டுபிடிக்கும் வழிமுறை என்றே அழைக்கப்படுகிறது.
இவருடைய கண்டுப்பிடிப்புக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நம் உடலில் ஆற்றல் எப்படி தேக்கி வைக்கப்படுகிறது மற்றும் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரைடு செரிமானத்திற்கு பின்பு குளூக்கோஸ் மற்றும் ஆற்றலாக வெளிப்படுகிறது. ஆற்றலின் வெளிப்பாடு அடினோசின் ட்ரை பாஸ்பேட் (ATP) என்று அழைக்கப்படும். இந்த சங்கிலி செயல்முறையை வெளிக்கொணர்தலில் இவரின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இது மட்டுமில்லை, நம் உடலில் வைட்டமின் பி9 (Vitamin B9) இருப்பதையும் இதன் குறைபாடு இரத்தசோகை என்ற நோயை உண்டாக்கும் என்பதையும் கண்டறிந்தார். முக்கியமாக கர்ப்ப காலத்தில் தாய்க்கு இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் அது குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். வைட்டமின் பி9 யின் இன்னொரு பெயர் போலிக் ஆசிட் (Folic Acid) என்பதாகும்.
இவருடைய வைட்டமின் பி9 கண்டுபிடிப்பு மற்றுமொரு மருந்து கண்டுபிடிப்பிற்கு உறுதுணையாக இருந்தது. அது இரத்தப் புற்றுநோயுக்கு பயன்படுத்தப்படும் மீதோட்ரெக்ஷேட் (Methotrexate) என்ற மருந்தாகும்.
மற்றுமொரு அறிய கண்டுபிடிப்பு நாம் இன்றளவும் பயன்படுத்தும் ஹெட்ரஸான் (Hetrazan) என்று அழைக்கப்படும் டைஎத்தில் கார்ப்பமசின் (Diethylcarbamazine) என்ற மருந்தாகும். இது ஃபைலாரியாஸிஸ் (Filariasis) என்ற நோயுக்கு அருமருந்தாகும். இந்த நோயை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் நம் கால்கள் யானை கால் (Elephantiasis) போன்று பருத்துவிடும்.
கடைசியாக இவர் கண்டுப்பிடிப்புக்களில் ஆகச் சிறந்தது ஆரியோமைசின் (Aureomycin) என்றழைக்கப்படும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்தாகும். இது "ரிக்கெட்ஷியா" (Rickettsia) நோயை குணப்படுத்தும் வல்லமையுடையது. இன்றளவும் உபயோகத்தில் உள்ளது.
இவ்வளவு கண்டுபிடிப்புக்களை செய்து நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாத்தவரின் பெயர் இதுவரை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படவும் இல்லை, அது மாதிரி மற்ற மதிப்பு மிக்க பரிசுகளை கொடுத்து கௌரவிக்கப்படவும் இல்லை. நம் இந்திய அரசும் இதுவரை உயரிய விருது கொடுத்து கௌரவிக்கவும் இல்லை.
அதனால், நாம் திரு சுப்பாராவ் அவர்களின் நினைவு நாள் 8 ஆகஸ்ட் ஐ நினைவு கூர்ந்து அவரை போற்றுவோம்.
No comments:
Post a Comment