Wednesday, January 6, 2016

இஞ்சி

இஞ்சி என்பதற்குஇஞ்சுதல்என்பதுதான் பொருள்அதாவது மழை பெய்தபின் கொஞ்ச நேரத்தில் தண்ணீர் பூமியில் இஞ்சி விடும் என்று சொல்வது வழக்கம் (நீரை உள்ளிழுத்தல்).


இஞ்சி பொதுவாக பல மருத்துவ குணங்களை  கொண்டுள்ளது.
  1. அதிகத் தாகம் எடுக்கும்போது, ஒரு துண்டு இஞ்சியை வாயிலிட்டு அடக்கிக்கொண்டால், தாகம் தீரும்.
  2. குடல், இரைப்பை முதலிய உறுப்புகளின் கழிவுகளை நீக்கும் வல்லமை பெற்றது.
  3. இரைப்பை, கல்லீரலை வலுவாக்கும்.
  4. பித்தம் மற்றும் அது சம்பந்தமான நோய்களை நீக்கி, ஜீரணத்தை எளிதாக்கும்.
  5. உலர்ந்த இஞ்சி, ‘சுக்குஎனப்படும். சுக்கு கஷாயம் ஒரு வலி நீக்கும் மருந்தாகும்.

இஞ்சியில் இருக்கும் மருத்துவகுண வேதிப்பொருட்கள் மஞ்சளில் உள்ள மருத்துவ வேதிப்பொருட்களின் ஒத்த தன்மையில் இருக்கும்.


இஞ்சி மற்றும் மஞ்சள் இரண்டிலும் மிக அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இருந்தும், இதை அடிபடையாகக் கொண்டு எந்த ஆங்கில (Allopathy) மருந்தும் சந்தைக்கு வரவில்லை ஏன்?

உதாரணத்திற்கு மலேரியாவிற்கு கண்டுப்பிடித்த குளோரோகுயின் (Chloroquine) என்ற மருந்தைப் பற்றி பார்ப்போம்.

சின்கோன அஃபிசினாளிஸ் (Cinchona officinalis) என்ற மரப்பட்டையிலிருந்து க்யூனைன் (Quinine) என்ற வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்பட்டது. இந்த மருத்துவகுண வேதிப்பொருள் மலேரியாவை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை ஆதாரமாக கொண்டு குளோரோகுயின் (Chloroquine) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

   

Friday, January 1, 2016

சித்தர் பாடல்

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு 
        மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் 
                   விருத்தனும் பாலனாமே!

இந்த சித்தர் பாடல் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது?
  1. இஞ்சி, சுக்கு, கடுக்காய் - இவைகளை அப்பிடியே சாப்பிட வேண்டுமா? அல்லது கஷாயம் செய்து சாப்பிட வேண்டுமா?
  2. ஒவ்வொன்றும் எத்தனை அளவு (மாத்திரை) சாப்பிட வேண்டும்?
  3. ஏன் இஞ்சியை காலையில் சாப்பிட வேண்டும்? நண்பகல் (அ) மாலையில் சாப்பிட்டால் என்ன பயன் (அ) தீங்கு ஏற்படும்? அதுபோல
  4. ஏன் சுக்கை நண்பகலில் சாப்பிட வேண்டும்? காலை (அ) மாலையில் சாப்பிட்டால் என்ன பயன் (அ) தீங்கு ஏற்படும்?
  5. ஏன் கடுக்காயை மாலையில் சாப்பிட வேண்டும்? காலை (அ) நண்பகலில் சாப்பிட்டால் என்ன பயன் (அ) தீங்கு ஏற்படும்?
  6. இஞ்சிக்கும் சுக்குக்கும் என்ன மாதிரி மருத்துவ குணங்கள் வேறுபடும்?
  7. இந்த  மூன்றையும் ஒரே வேளையில் சாப்பிட்டால் இதே பயனை தருமா? தராதா? தராது என்றால் ஏன் தராது?
  8. ஒரு மண்டலம் என்றால் 48 நாட்கள் - ஏன் 48 நாட்கள் சாப்பிட வேண்டும்?
  9. என்ன மாதிரி மருத்துவ சான்றுகள் (Clinical Evidence) உள்ளன?
என் அறிவுக்கு எட்டிய விதத்தில் அனைத்து கேள்விகளுக்கும் கூடுமானவரை தெரிந்த (அ) படித்த பதில்களை பதிவு பண்ண விரும்புகிறேன்.

சித்த மருத்துவம் முத்தாது எனப்படும் வாதம், பித்தம், கபம் என மூன்று விதிகளின் அடிப்படையில் அமைந்தது. இதைதான் திருவள்ளுவர் அழகாக திருக்குறளில் சொல்லியிருப்பார்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று

வாதம்:பித்தம்:கபம் (4:2:1) என்ற விகிதாசாரத்தில் இருக்கும், இந்த அளவுகோலின் சமநிலை மாறும்போது நோய் ஏற்படுகிறது. அதுபோல் மூன்று நிலைகளும் சில நேரங்களில் (பகல் + இரவு) மேலோங்கியிருக்கும்.


காலை 6.00 - 10.00 மணிவரை கபம் மேலோங்கியிருக்கும்
காலை 10.00 - மதியம் 2.00 மணிவரை பித்தம் மேலோங்கியிருக்கும்
மதியம் 2.00 - மாலை 6.00 மணிவரை வாதம்  மேலோங்கியிருக்கும்.

சித்தர் பாடலில்
இஞ்சியை காலையிலும் சுக்கை நண்பகலிலும் கடுக்காயை மாலையிலும் உண்ணவேண்டும் என்று சொல்லப்பட்டியிருக்கிறது.

பயன்படுத்தும் முறை

இஞ்சி

"இஞ்சிக்கு புறம் நஞ்சு" - பழமொழி

ஆகையால் இஞ்சியை நன்றாக கழுவி புறத்தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் போட்டு, வெள்ளை துணியால் மூடி, வெய்யிலில் (சூரிய ஒளியில்) 12 நாட்கள் ஊற வைக்க வேண்டும். தேனில் ஊற வைத்த இஞ்சியை பிறகு, தினமும் 2 - 4 துண்டுகள் அதிகாலையில் சாப்பிட வேண்டும்.

அல்லது

இஞ்சியை நன்றாக நசுக்கி சாறு எடுக்க வேண்டும், சாறை குளிர் சாதனப்பெட்டியில் 5 - 6 நாட்கள் வைக்க வேண்டும். பின்பு 2 தேக்கரண்டி இஞ்சி சாறு + 2 தேக்கரண்டி தேன்  கலந்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

சுக்கு

"சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை" - பழமொழி

ஒரு ஜாடியில் (அ) பாத்திரத்தில் நெல்லிக்காய் சாறு (1/4 லிட்டர்) + தயிர் (1/4 லிட்டர்) + பெருங்காயம் (25 கிராம்) எடுத்து கொள்ள வேண்டும். இதில் சுக்கை (250 கிராம்) போட்டு, நன்றாக வெய்யிலில் ஊற வைக்க வேண்டும் [5 நாட்கள் (அ) சாறு வற்றும் வரை). ஊறிய சுக்கை பொடி செய்து நண்பகலில் 1/2  தேக்கரண்டி தினமும் சாப்பிட வேண்டும். (நன்றி: http://jpblog-com.blogspot.my/2011/11/food-from-nature.html)

கடுக்காய்

"கடுக்காய்க்கு அக நஞ்சு" - பழமொழி

கடுக்காயை இரண்டாக உடைத்து உள்ளிருக்கும் பருப்பை நீக்க வேண்டும். பின்பு, பருப்பு நீக்கிய கடுக்காயை பொடி செய்து 1 தேக்கரண்டி (சுடு தண்ணீரிலோ (அ) பாலிலோ கலந்து) தினமும் சாப்பிட வேண்டும்.

ஒரு மண்டலம் 48 நாட்கள் - ஏன்?

நவகிரகங்கள் (9) + இராசிகள் (12) + நட்சத்திரங்கள் (27) = 48

இந்த கிரக மண்டலம், இராசி மண்டலம், நட்சத்திர மண்டலம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையான 48-யை ஒரு மண்டலமாக வகுத்துள்ளார்கள். ஒரு காரியம் நல்லபடியாக நடைபெற வேண்டுமானால் கிரகங்களும், இராசிநாதர்களும், நட்சத்திர தேவதைகளும் துணைபுரிந்தால் மட்டுமே நடைபெறும்.
(நன்றி: http://www.srisaravana.com)

இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ குணங்களுக்கு காரணம் ஏன்?

இஞ்சி மற்றும் சுக்கில்  பின்வரும் மருத்துவ குண வேதிபொருட்கள் உள்ளன.

ஜின்ஜிரோன் (Zingerone); ஜின்ஜிரோல் (Gingerol); ஷோகோல் (Shogaol); பாராடோல் (Paradol) மற்றும் பல 




இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ வேதி பொருளின் வேறுபாடு என்ன?

இஞ்சியில் ஜிஞ்சிரோல் (Gingerol) என்ற மருத்துவ வேதிப்பொருள் மிகுதியாக இருக்கும். இஞ்சியை வெய்யிலில் காய வைக்கும்பொழுது, அதிலுள்ள நீர்சத்து போய், ஜிஞ்சிரோல் (Gingerol) என்ற மருத்துவ வேதிப்பொருள், ஷோகோல் (Shogaol) என்ற மருத்துவ வேதிப் பொருளாக மாறிவிடும்.
ஆகையால் சுக்கில் ஷோகோல் (Shogaol) என்ற வேதிப்பொருள் மிகுதியாக இருக்கும்.


கடுக்காயின் மருத்துவ வேதிபொருட்கள் - ஃபினோலிக்ஸ் (Phenolics) & டேன்னின்ஸ் (Tannins)



ஒவ்வொன்றின் மருத்துவ குணங்களை விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.