Showing posts with label IITD Professor. Show all posts
Showing posts with label IITD Professor. Show all posts

Friday, September 16, 2016

அங்கீகாரம் - இந்தியாவின் சாபக்கேடு



அலோக் சாகர், இவர் IIT-Delhi முன்னால் பேராசிரியர். தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள மலைவாழ் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த கிராமத்தின் பெயர் "கோச்சமு" என்ற மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் கிராமம். இங்கு சாலை வசதியோ மின்சார வசதியோ எதுவும் கிடையாது. ஏறத்தாழ 1000 பேர் வசிக்கும் கிராமம் ஆகும்.  

இவரைப்பற்றி பேச என்ன காரணம்? இவர் இந்தியாவின் ரிசர்வ் பேங்க் முன்னால் கவர்னர் திரு ரகுராம் ராஜனின் ஆசிரியர் ஆவார். இவர் டெல்லி IIT கல்லூரியில் இளநிலை படிப்பையும், முதுநிலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பை அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் (Houstan, Texas) பல்கலைக்கழகத்திலும் முடித்திருக்கிறார். அதற்கு பிறகு டெல்லி IIT கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார், பின்பு 1982 ஆண்டு பணியிலிருந்து விலகி ஆதிவாசி மக்களுக்காக கடந்த 32 ஆண்டுகளாக உழைத்து கொண்டு இருக்கிறார். 

இவருடைய தினசரி வாழ்க்கை, விதைகளை சேகரிப்பது, அதை பழங்குடி மக்களிடம் கொடுத்து செடி, கொடி  மரங்களை நடவைப்பது. இதுவரை 50000 மரங்களை நட்டு வளர்த்துள்ளார். இவரின் சொத்து கதவு இல்லாத ஓலை குடிசை வீடு, ரொம்ப பழைய சைக்கிள், 3 குர்தா மட்டுமே. ஒவ்வொரு நாளும் 60 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து பக்கத்து கிராமங்களுக்கு சென்று அந்த பழங்குடி மக்களுக்கு இயற்கையை பற்றி புரிய வைத்து இயற்கையோடு இயைந்து வாழ வழி சொல்லித்தருகிறார். இவரது சேவை மிகவும் மகத்தானது.

எளிமையின் உருவம்! தீர்க்கதரிசனமான பார்வை. இவருடைய அப்பா இந்திய அரசாங்கத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் (IRS officer). அம்மா, இயற்பியல் பாடம் நடத்தும் கல்லூரி பேராசிரியை மற்றும் இவரது சகோதரர் தற்சமயம் டெல்லி IIT கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவ்வளவு இருந்தும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வந்து விட்டார். அவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். 

இவரை பற்றி இப்பத்தான் தெரிய வருகிறது, ஏன்? ஏனெனில் அவர் வசிக்கும் ஊரில் சமீபத்தில் தேர்தல் நடந்தது, அச்சமயம் அதிகாரிகள் அவரை அந்த ஊரை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான் அவர் தன்னைப்பற்றி சொல்லியிருக்கிறார். அதிகாரிகள் குறுக்கு விசாரணை செய்து உறுதிப்படுத்திய பிறகுதான் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.

நமக்குத்தான் இது போன்ற மக்கள் உயிருடன் இருக்கும்போது அங்கீகரிக்க தெரியாதே! செத்த பிறகுதானே புகழ் பாடுவோம் - என்ன சாபக்கேடோ!

Alok Sagar