Showing posts with label Novavax. Show all posts
Showing posts with label Novavax. Show all posts

Sunday, April 25, 2021

கோவிட்-19 (Covid-19 Vaccine) தடுப்பூசி

கோவிட்-19 என்ற வைரஸ் பெரும் தொற்று நோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நோய் தொற்று முதன்முதலில் சீனா நாட்டில் ஹூபை (Hubei) மாகாணத்தில் உள்ள வூஹான் (Wuhan) நகரத்தில் டிசம்பர் 2019 ஆண்டு கண்டறியப்பட்டது.


இந்த வைரஸ், வூஹான் நகரத்தில் உள்ள கறி சந்தையில் விற்கப்பட்ட வௌவால் (Bat) கறியிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கும் என்று மருத்துவ உலகம் நம்பியது.


உலக சுகாதார மையம் (WHO) மார்ச் 11, 2020 ல் இந்த நோய் உலகப்பெரும் தொற்று (Pandemic) என்று அறிவித்தது. கோவிட்-19 நோய் மிகக்குறுகிய காலத்தில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி ஏராளமான உயிர்களை காவு வாங்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் உலக பொருளாதாரத்தையே முடக்கிப் போட்டுள்ளது. இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், மூக்கு ஒழுகுதல், மூச்சு வாங்குதல், மணம், சுவை அறியும் தன்மை இழத்தல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு முதலியன முக்கிய அறிகுறிகளாக தென்பட்டன. 

இந்த நோய் சாதாரணமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எச்சில் மூலமாகவோ அல்லது தொடுதல் மற்றும் தும்மலின் போது காற்றின் வழியாக சீக்கிரமாக பரவுகிறது. இந்த நோய் தொற்றின் பரவலை தனி மனித இடைவெளி (6 அடி), முகக்கவசம் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் மூலம் கட்டுப்படுத்தலாம்.  


COVID-19 என்பது கொரோனா வைரஸ் நோய் (COrona VIrus Disease)-2019 என்பதின் சுருக்கமாகும். இந்த வைரஸ் நோய் மனிதனுடைய நுரையீரலை தாக்கி நிமோனியாவை உண்டுபண்ணி (நுரையீரலில் நீர் கோர்த்துக்கொள்வது) சுவாசிக்க முடியாமல் செய்து அதன்மூலம் உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை வேலையிழக்க செய்து கடைசியில் உயிரை கொல்கிறது. மருத்துவ உலகம் இந்த வைரஸை சார்ஸ்-கோவி-2 (SARS-COV-2; Severe Acute Respiratory Syndrome-Corona Virus-2) என்றழைக்கிறது. இந்த நோய் முதல் அலையில் அதிகமாக வயதானவர்களை தாக்கியது மேலும் சுவாச நோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களை அதிகம் பாதித்தது. கோவிட்-19 தாக்கியவர்களை முதலில் தனியாக பிரித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த நோய் 7 லிருந்து 10 நாட்களுக்குள் சரியாகி விடும். இந்த காலத்தில் நோயுற்றவர்கள் தேவையான சத்துள்ள உணவு பொருட்களை முக்கியமாக வைட்டமின் C & D நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை ஏற்படும். அவர்களுக்கு பிராணவாயு (Oxygen) தனியாக கொடுக்க வேண்டும் (வெண்டிலேட்டர் மூலமாக) மற்றும் மருத்துவரின் மேற்பார்வையில் முக்கிய மருந்துகளை (Remdesivir மற்றும் Corticosteroids) கொடுத்து குணப்படுத்தலாம். 


கோவிட்-19 வைரஸ் தன்னைத்தானே உருமாற்றிக்கொண்டு வெவ்வேறு வடிவில் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று உக்கிரமாக வெளிப்படுத்தி அதிவேகமாக பரவி மேலும் மேலும் உலக மக்களை அச்சுறுத்துகிறது. ஆகையால் இதை கட்டுப்படுத்த வேண்டுமானால் தடுப்பூசி மருந்து தான் ஒரே தீர்வு என்று உலக நாடுகளும், உலக சுகாதார மையம் மற்றும் பெரிய மருந்து நிறுவனங்களும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டி ஒரு வருடத்தில் முறையான தடுப்பூசிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

தடுப்பூசி என்பது கீழ்காணும் வழிமுறைகளில் தயாரிக்கப்படும்.
  1. நோயை உண்டுபண்ணும் வைரஸை முழுவதும் செயல் இழக்கச்செய்து அல்லது கொன்று அதை உடம்பில் செலுத்துவது (Inactivated Vaccine)
  2. நோய் உண்டுபண்ணும் வைரஸின் செயல் திறனை மட்டும் (Virulence) நீக்கி பின்பு உயிருடன் கூடிய வைரஸை உடம்பில் செலுத்துவது (Live-attanuated Vaccine).
  3. நோயை உண்டுபண்ணும் வைரஸின் புரதத்தை (Protein) அதாவது COVID-19 வைரஸின் புரதத்தை (Spike protein) எடுத்து மற்றொரு நோய் உண்டுபண்ணாத வைரஸில் புகுத்தி பின்பு உடலில் செலுத்துவது (Viral Vector Vaccine).
  4. நோய் உண்டுபண்ணும் வைரஸின் மரபணுவை (DNA or RNA or mRNA) மட்டும் தனியாக எடுத்து அதை கொழுமியம் நானோ துகள்களுடன் (Lipid Nanoparticles) சேர்த்து பின்பு உடலில் செலுத்துவது (Nucleic Acid Vaccine).

நியூக்ளிக் ஆசிட் (மரபணு) தடுப்பூசி என்பது Deoxyribonuclic Acid (DNA) முதலில் messenger Ribonucleic Acid (mRNA) ஆக மாற்றப்பட்டு அத்துடன் கொழுமியம் நானோ துகள்களை சேர்த்து பின்பு அதை உடலில் செலுத்துவது ஆகும். ஏனென்றால் mRNA என்பது நிலையானது அல்ல, ஆகையால் கொழுமியம் நானோ துகள்களுடன் சேர்க்கும்பொழுது mRNA நிலைத்தன்மை பெறுகிறது. இந்த முறையில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து தான் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.


உலக மருந்து நிறுவனங்கள் மேலே குறிப்பிட்ட முறைகளில் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து ஒவ்வொரு நாட்டின் அரசிடமும் கட்டுப்படியான விலையில் விற்பனை செய்துள்ளன. குறிப்பாக Pfizer, Moderna, AstraZeneca, Novavax மற்றும் Janssen நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு கொடுத்துள்ளது. அதுமாதிரி சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்கள் நாட்டிலே தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து உற்பத்தி பண்ணி மக்களுக்கு அளித்திருக்கிறது.

கீழ்காணும் நாடுகளில் பின்வரும் தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளித்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.


இந்திய மக்கள் அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக சுவாச நோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.


நன்றி: Nature Publications; CDC; Countries' website