கற்பூரவள்ளி சித்த மருத்துவத்தில் "கற்ப மூலிகை" என்று அழைக்கப்படும். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இந்த மருத்துவ பயன்களுக்கு காரணம் அதில் பொதிந்துள்ள வேதிப்பொருட்களே ஆகும். இவை டெர்பினாய்ட்ஸ் (Terpenoids) என்ற வகையை சேர்ந்ததாகும்.
சித்தர்கள் அகத்தியர் மற்றும் தேரையர் இந்த மூலிகையை பற்றி பாடல்களாக வடித்துள்ளனர். அவை
காச இருமல் கதித்தம சூரியயையம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு
(அகத்தியர் குணபாடம்)
கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே
(தேரையர் குணபாடம்)
குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். அப்போது கற்பூரவள்ளி இலையை பிழிந்து சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு (Palm Sugar) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.
இம்மூலிகை காச நோய்க்கு அருமருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறெடுத்து அதனுடன் தேன் (Honey) கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறையும்.
ஆகையால் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதனுடைய மருத்துவ பயனை அடைவோம்.