Showing posts with label Flavonoids. Show all posts
Showing posts with label Flavonoids. Show all posts

Sunday, October 22, 2017

சிறுகண் பீளை - Aerva lanata


சிறுகண் பீளை ஒரு அற்புதமான மூலிகை, இதற்கு பூளைப்பூ, பொங்கல் பூ, சிறு பீளை என்று பல பெயர்கள் உண்டு. பொதுவாக தமிழ் நாட்டில் பல பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகையிலும்  சில சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப் படுகிறது. 

பொங்கல் பண்டிகையின் போது நம் வீடுகளில் சிறுகண் பீளை, ஆவாரை, வேப்பிலை ஆகிய மூன்றையும் கட்டி வைப்போம், இதற்கு காப்பு கட்டு என்று பெயர், மார்கழி மாதம் கடைசி தேதியில் செய்வோம். பொங்கல் முடிந்தவுடன் அதை தூக்கி வீசிவிடுவோம். ஏன் என்றால் இந்த மூலிகைகளின் மகத்துவம் நமக்கு தெரிவதில்லை, அதுபோல் நம் வீடுகளில் இதை ஏன் கட்டினோம் என்றும் புரிந்து கொள்வதில்லை. இந்த மூலிகைகள் விஷக்கடிக்கு அருமருந்தாகும். 

சிறுகண் பீளை சிறுநீர் கல்லை உடைத்து வெளியேற்றும் ஆற்றல் உடையது. அவ்வாறு செய்வதனால் நமக்கு அறுவை சிகிச்சை தேவை படுவதில்லை, இதைத்தான் மதிப்பிற்குரிய நம்மாழ்வார் அவர்கள் "அறுவை சிகிச்சை மூலிகை" என்று அழைப்பார்.

இது மானாவாரியாக அனைத்து பகுதியிலும் விளையக்கூடிய பயிராகும். மார்கழி, தை மாதத்தில் இதன் விளைச்சல் அதிகம் இருக்கும். இந்த மூலிகையை பற்றி பதார்த்த குணப்பாடத்தில் (291) குறிப்பிடப் பட்டுள்ளது.

"நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை 
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும் 
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை 
யாமிது கற்பேதி யறி"

இதுபோல் தேரையர் அவர்கள் தன்னுடைய குணவாகடத்திரட்டில் இம்மூலிகையை பற்றி குறிப்பிட்டுள்ளார் 

"சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை 
விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே 
கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிற் கழன்றோடுங்காண்"

எவ்வாறு பயன்படுத்துவது?
  1. சிறுகண் பீளையை சமூலமாக (முழுச்செடி) எடுத்து நன்றாக கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அரைத்து  சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இச்சாற்றை 50 மிலி வீதம் காலை மாலை என பருகி வந்தால் சிறுநீர் கல்லடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் விரைவில் குணமாகும்.
  2. சிறுகண் பீளை குடிநீராகவும் அருந்தலாம். 
குடிநீர் எவ்வாறு தயாரிப்பது?

சிறுகண் பீளை சமூலம், நெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றை தலா 25 கிராம் எடுத்து நசுக்கி அவற்றை 4 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அது 1 லிட்டராக சுண்டிய பின்பு அதை ஆற வைத்து, வடிகட்டி ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவை குடித்து வந்தால் சிறுநீர் கல் கரைந்து வெளியேறிவிடும்.

சிறுபீளையில் இருக்கும் மருத்துவகுணப் பொருட்கள் 



எளிதில் கிடைக்கும் இவ்வகையான மூலிகை செடிகளை பயன்படுத்தி நம்முடைய ஆரோக்கியத்தை பேணிக் காப்போம்.

Tuesday, October 10, 2017

யானை நெருஞ்சில் (Pedalium murex)


இத்தாவரம் யானை நெருஞ்சில் அல்லது யானை வணங்கி என்று அழைக்கப்படும். இதில் இருக்கும் முட்களைப் பார்த்து யானைகள் பயப்படும் என்பதனால் இப்பெயர் பெற்றது. 

இந்த மூலிகைச் செடி பயிர் நிலத்தில் நன்றாக வளரக்கூடியது, களை என்று தான் சொல்வோம், ஆனால் இதில் அளப்பரிய மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் இலை சதைப் பாங்காக இருக்கும். தண்ணீரில் போட்டால் அந்த நீர் உடனே கெட்டித்தன்மை ஆவதை பார்க்கலாம். இச்செடியில் உள்ள காய், பூ, இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவத்திற்கு உபயோகமாகும். அதனால்தான் இச்செடியை காயகல்ப மூலிகை என்று சொல்வார்கள்.

பொதுவாக தமிழ் நாட்டில் இம்மூலிகையை சிறுநீரகக் கல்லை கரைப்பதற்குக் கொடுப்பார்கள். இச்செடியின் சாற்றை 8 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் கல் கரைந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.

எப்படி தயாரித்து சாப்பிடுவது?
  1. யானை நெருஞ்சில் செடியை சமூலமாகவும், அத்துடன் மூச்சிரட்டை செடி (ஒரு கைப்பிடி அளவு) மற்றும் சிறுகண் பீளை (ஒரு கைப்பிடி அளவு) மூன்றையும் நன்றாக அரைத்து அதில் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து 500மிலி ஆனவுடன் இறக்கி விடவும். இளஞ்சூட்டில் வடிகட்டி, பெரியவர்கள் 250மிலி காலை மாலை என இரு வேளை தொடர்ந்து 8 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அதன் பலனை நன்றாக உணர்வீர்கள்.
  2. யானை நெருஞ்சில் இலையை புளிச்ச நீரில் (பழைய சோற்று நீர்) ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த புளிச்ச நீரை குடித்தால் இதே பயனை அடையலாம். 
  3. வீட்டில் ரசம் பண்ணும்பொழுது அதில் இச்செடியின் இலைகளை போட்டுத் தயாரித்தால் அதற்கு பெயர் யானை நெருஞ்சில் ரசம். இதுவும் சிறுநீர் கல்லைக் கரைப்பதற்கு மிகவும் பயன்படும்.
இவ்வாறு மூன்று வகைகளில் இச்செடியை பயன்படுத்தலாம்.

இம்மூலிகையின் மருத்துவக்குணப் பொருட்கள்



எளிதில் கிடைக்கும் இம்மூலிகைகளை பயன்படுத்தி நம்முடைய ஆரோக்கியத்தை பேணிக்காப்போம்.