மூக்கிரட்டை கொடியினத்தை சேர்ந்த கீரை வகையாகும். இது நமது ஊரில் புல்வெளிகளிலும், வயல் வெளியிலும் படர்ந்து வளர்ந்து இருப்பதை காணலாம். இதனுடைய தாவரவியல் பெயர் போரோவியா டிஃபியூசா (Boerhaavia diffusa).
மூக்கிரட்டை பற்றிய அகத்தியர் குணபாடம்
"சீத மகற்றுந் தினவடக்குங் காந்திதரும்
வாத வினையை மடிக்குங்காண் பேதி
கொடுக்குமதை உண்டாக்காற் கோமளமே! பித்தம்
அடுக்குமே மூக்கிரட்டையாய்…"
மூக்கிரட்டை சீதள நோய்களை அகற்றும், தினவு என்கிற நமைச்சலைப் போக்கும், உடலுக்கு அழகை தரும், வாதத்தால் (காற்றால்) உண்டாகும் நோய்களை அழிக்கும், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப் போக்கும், பித்தமும் அதிமாகும். ஆகையால் ஒவ்வொரு மருந்துக்கும் பக்கவிளைவுகள் உள்ளது என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும்.
மூக்கிரட்டையின் வேர் அதிகமான மருத்துவ குணங்களை கொண்டது. மேலும் இதனை சமூலமாகவும் உபயோகப்படுத்தலாம்.
மூக்கிரட்டை கசாயம்
நிழலில் உலர வைக்கப்பட்ட வேரை (10 கி) தண்ணீரில் (200 மிலி) நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு 100 மிலி யாக வந்தவுடன் கசாயத்தை ஆற வைத்து வடிகட்டி பருக வேண்டும். காலை மாலை இரு வேளையாக 20 மிலி அளவு உணவுக்கு முன்பு குடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் உடலில் ஏற்பட்ட தைராய்டு பிரச்சனை குணமாகும். உடல் பருமன் குறையும் மேலும் தொப்பையை குறைக்கும். சிறுநீரக கல்லை வெளியேற்றுவதற்கு இது அருமருந்தாகும். இரத்த சோகையை போக்கி இரத்த ஓட்டத்தை சரி செய்யும்.
இத்தனை பயன்களுக்கும் முக்கிய காரணம் இதில் பொதிந்து இருக்கும் மருத்துவ குண வேதிப்பொருட்கள் ஆகும்.