இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் மதிப்புக்குரிய திரு. சர்தார் வல்லப்பாய் படேல் ஆவார். அவருடைய பிறந்த தினம் அக்டோபர் 31, 1875. இன்று அவருடைய 143-வது பிறந்த தினம். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர். அப்போது நம் இந்தியாவில் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. அவை அனைத்தும் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தன. இவருடைய சீரிய முயற்சியால் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு "இந்தியா" என்ற நாடானது. அதனை நினைவு கூறும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் உலகிலேயே உயரமான "ஒற்றுமைக்கான சிலை".
இந்த சிலை குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றங்கரையிலுள்ள சர்தார் சரோவர் அணையின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 597 அடி (182 மீட்டர்) யாகும். உலகிலேயே உயரமான சிலை என்ற அந்தஸ்து பெற்றுள்ளது. இது கட்டடக்கலையின் திறமைக்கு மிகப்பெரிய சான்றாகும். இந்தியாவின் தலைசிறந்த சிற்பி பத்மபூஷன் திரு ராம் வி. சுதர் அவர்களும், பொறியாளர்களும் இணைந்து பணியாற்றி இச்சாதனையை செய்து உள்ளனர்.
சர்தார் சிலையின் முகத்தை பார்க்கும் பொழுது எத்தனை கடினமான வேலையை எவ்வளவு அழகாக, சிறப்பாக மிக குறுகிய காலத்தில் செய்து முடித்து உள்ளார்கள் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. இந்த சிலையை செய்ய 70,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 18500 மெட்ரிக் டன் எஃகு, 6000 மெட்ரிக் டன் இரும்பு, 1700 மெட்ரிக் டன் வெண்கலம் உபயோகப்படுத்தப்பட்டு 250 பொறியாளர்கள் மற்றும் 3700 பணியாளர்கள் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு சுமார் ₹3000 கோடியாகும்.
அரசியல் காரணங்கள் பலவாக இருந்தாலும் இந்த கட்டடக்கலையின் சிறப்புக்கு நாம் தலைவணங்க வேண்டும் மற்றும் பெருமைப்பட வேண்டும்.
சிற்பி: ராம் வி. சுதர்
கட்டடக்கலைக்கு ஒரு சல்யூட்!