ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடக்கும் தேர்தல் திருவிழா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரிடமும் தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டு விட்டது. தேர்தல் ஆணையம் முக்கிய நிகழ்வுகள் பற்றி கீழ்காணும் அட்டவணையை வெளியிட்டது.
ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 2021 ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 38 மாவட்டங்களையும் 234 தொகுதிகளாக பிரித்து தேர்தல் நடைபெற்றது. இதில் 6.26 கோடி மக்கள் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
தேர்தல் ஆணையம் சொன்ன வாக்காளர்கள் கணக்கு சரியானதா என்று புரிய வில்லை. ஏனென்றால் இதே தேர்தல் ஆணையம் தான் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான கணக்கை சொல்லியிருக்கிறது. எது உண்மையான வாக்காளர்கள் எண்ணிக்கை என்று தெரியவில்லை.
தமிழ் நாடு தேர்தல் களத்தில் இதுவரையில்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் கட்சிகள் போட்டியில் கலந்து கொண்டது. ஏறத்தாழ 40 கட்சிகள் தனியாகவோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டியிட்டன. அதுவும் இந்த தேர்தலில் பெரிய ஆளுமைகள் திரு கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா இல்லாத சட்டமன்ற தேர்தலாகும். அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு அணி, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் ஒரு அணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாகவும், மேலும் மற்ற உதிரி கட்சிகளும் இந்த தேர்தலில் பங்கேற்றன. முக்கியமாக நாம் தமிழர் கட்சி 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் இந்த சட்டசபை தேர்தலில் களமிறக்கி பெண்களுக்கு அரசியலில் 50 சதவீதம் ஒதுக்கீடு கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
தேசிய ஜனநாயக கூட்டணி
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
மக்களின் முதல் கூட்டணி
அமமுக கூட்டணி
சகாயம் அரசியல் பேரவை கூட்டணி
மற்ற கட்சிகள்
கட்சி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள்
மொத்தமாக 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 4 கோடியே 57 இலட்சத்து 46 ஆயிரத்து எழுநூற்று தொண்ணூற்று மூன்று (4,57,46,793) ஓட்டுக்கள் EVM இயந்திரத்தின் மூலமும், 4 இலட்சத்து 89 ஆயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஒன்பது (4,89,699) ஓட்டுக்கள் தபால் மூலமாகவும், மொத்தமாக 4 கோடியே 62 இலட்சத்து 36 ஆயிரத்து நானூற்று தொண்ணூற்று இரண்டு (4,62,36,492) ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இதுவே குறிப்பிட தகுந்த ஓட்டு சதவீதம் தான் ஏனென்றால் கொரோனா என்ற உயிர்கொல்லி நோய் இரண்டாம் அலையாக தமிழகம் எங்கும் பரவலாக பரவிக்கொண்டிருக்கிறது என்ற சூழ்நிலையில் 70 சதவீதத்திற்கு மேல் பதிவாயிருந்தது பாராட்டத்தக்க அம்சமாகும். இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06 சதவீதமும் பதிவாகியிருந்தது.
தமிழ் நாடு 2021 தேர்தல் வாக்கு சதவீதம்
தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இம்முறை தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பெருமளவில் ஆதரவு தந்து ஆட்சி கட்டிலில் அமர்த்தி விட்டார்கள். திமுக தனியாக 125 இடங்களிலும், கூட்டணியாக 159 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த கூட்டணியில் மதிமுக, கொமதேக, மமக மற்றும் தவாக ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்களுடைய வெற்றியும் திமுக வெற்றியாக கணக்கில் கொள்ளப்படுவதால் திமுக மொத்தமாக 133 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ந்து 10 வருடங்களாக ஆளும் கட்சியாக (2011 - 2021) இருந்த அதிமுக மோசமாக தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு இல்லாமல் பாராட்டும் விதத்தில் தனியாக 65 இடங்களிலும், கூட்டணியாக 75 இடங்களிலும் வெற்றிப்பெற்று வலுவான எதிர்க்கட்சியாக வந்துள்ளது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 3.15 சதவீதம் மட்டுமே.
இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக கூட்டணி மற்றும் கமல் அவர்களின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி, இரண்டுமே எதிர்பார்க்காத விதத்தில் தோல்வியை சந்தித்து உள்ளன. அமமுக கூட்டணி 2.85 சதவீதமும், மநீம கூட்டணி 2.74 சதவீதமும் மட்டுமே வாக்குகள் பெற்றுள்ளன.
234 தொகுதிகளில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் தேர்தலில் நிறுத்தி போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் 6.58 சதவீதம் வாக்குகளை பெற்று 3 ஆவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. இக்கட்சியின் சார்பாக யாரும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகாமல் போனாலும் அனைத்து தொகுதியிலும் சீரான வாக்குகளை பெற்று அனைத்து மக்களுக்குமான கட்சியாக உருவாகி உள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி மற்றும் வாக்கு சதவீதம் பட்டை வரைபடமாக (Bar Graph) கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணிகள் (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மநீம கூட்டணி) பெற்ற வாக்குகள், நாம் தமிழர் கட்சி மற்றும் NOTA பெற்ற வாக்குகள் பை வரைபடமாக (Pie Graph) கொடுக்கப்பட்டியிருக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் இந்த சமயத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தலைவிரித்து ஆடிக்கொண்டியிருக்கிறது. தேர்தல் பரப்புரையின் போது அனைத்து கட்சிகளும் மக்களை கூட்டி எங்களுக்கு தான் அதிகமாக ஆதரவு இருப்பதுபோல் மக்களிடம் காட்டிக்கொண்டார்கள். அதன் விளைவு கற்பனை பண்ண முடியாத தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அதிமுக அரசு வைத்து சென்றிருக்கும் கடன் 5 இலட்சம் கோடியாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக எப்படி இவை அனைத்தையும் சமாளித்து நல்லாட்சி தருகிறது என்று பார்ப்போம்.
நன்றி: ECI, The Hindu, Wikipedia