Friday, September 16, 2016

அங்கீகாரம் - இந்தியாவின் சாபக்கேடு



அலோக் சாகர், இவர் IIT-Delhi முன்னால் பேராசிரியர். தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள மலைவாழ் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த கிராமத்தின் பெயர் "கோச்சமு" என்ற மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் கிராமம். இங்கு சாலை வசதியோ மின்சார வசதியோ எதுவும் கிடையாது. ஏறத்தாழ 1000 பேர் வசிக்கும் கிராமம் ஆகும்.  

இவரைப்பற்றி பேச என்ன காரணம்? இவர் இந்தியாவின் ரிசர்வ் பேங்க் முன்னால் கவர்னர் திரு ரகுராம் ராஜனின் ஆசிரியர் ஆவார். இவர் டெல்லி IIT கல்லூரியில் இளநிலை படிப்பையும், முதுநிலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பை அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் (Houstan, Texas) பல்கலைக்கழகத்திலும் முடித்திருக்கிறார். அதற்கு பிறகு டெல்லி IIT கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார், பின்பு 1982 ஆண்டு பணியிலிருந்து விலகி ஆதிவாசி மக்களுக்காக கடந்த 32 ஆண்டுகளாக உழைத்து கொண்டு இருக்கிறார். 

இவருடைய தினசரி வாழ்க்கை, விதைகளை சேகரிப்பது, அதை பழங்குடி மக்களிடம் கொடுத்து செடி, கொடி  மரங்களை நடவைப்பது. இதுவரை 50000 மரங்களை நட்டு வளர்த்துள்ளார். இவரின் சொத்து கதவு இல்லாத ஓலை குடிசை வீடு, ரொம்ப பழைய சைக்கிள், 3 குர்தா மட்டுமே. ஒவ்வொரு நாளும் 60 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து பக்கத்து கிராமங்களுக்கு சென்று அந்த பழங்குடி மக்களுக்கு இயற்கையை பற்றி புரிய வைத்து இயற்கையோடு இயைந்து வாழ வழி சொல்லித்தருகிறார். இவரது சேவை மிகவும் மகத்தானது.

எளிமையின் உருவம்! தீர்க்கதரிசனமான பார்வை. இவருடைய அப்பா இந்திய அரசாங்கத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் (IRS officer). அம்மா, இயற்பியல் பாடம் நடத்தும் கல்லூரி பேராசிரியை மற்றும் இவரது சகோதரர் தற்சமயம் டெல்லி IIT கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவ்வளவு இருந்தும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வந்து விட்டார். அவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். 

இவரை பற்றி இப்பத்தான் தெரிய வருகிறது, ஏன்? ஏனெனில் அவர் வசிக்கும் ஊரில் சமீபத்தில் தேர்தல் நடந்தது, அச்சமயம் அதிகாரிகள் அவரை அந்த ஊரை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான் அவர் தன்னைப்பற்றி சொல்லியிருக்கிறார். அதிகாரிகள் குறுக்கு விசாரணை செய்து உறுதிப்படுத்திய பிறகுதான் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.

நமக்குத்தான் இது போன்ற மக்கள் உயிருடன் இருக்கும்போது அங்கீகரிக்க தெரியாதே! செத்த பிறகுதானே புகழ் பாடுவோம் - என்ன சாபக்கேடோ!

Alok Sagar   

Wednesday, August 31, 2016

இந்தியா


இந்த கார்ட்டூன் திரு சிராஜ் காசிம் என்பவரால் வரையப்பட்டது. இது ஒடிசா மாநிலத்தில் நடந்த சம்பவம், திரு தானா மாஜி என்பவருடைய மனைவி இறந்த பிறகு உடலை 10 கிலோமீட்டர் தூக்கிக் கொண்டு நடந்தே வந்திருக்கிறார். ஏனெனில் அவருக்கு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் ஏழை மலைவாழ் குடிமகன். இந்த செய்தியை படித்த வலியின் காரணமாக வரையப்பட்டது.

நன்றி: சிராஜ் காசிம் 

அய்யோ பதறுதுங்க
அடிவயிறு எரியுதுங்க
பொய்யா நெசமான்னும்
புத்திக்கு வெளங்கலங்க

கட்டுனவ செத்துப்போனா
காரியந்தான் செய்வாங்க
பொட்டலமா தூக்கிக்கிட்டா
பொடிநடையா போவாங்க?

பெத்த மக அழுதுகிட்டே
பேசாம நடக்கயில
கத்தியழ ஒருத்தருமே
கடுகளவும் நெருங்கலயே

பொட்டியில காசிருந்தா
போயிருப்பா கவுரமா
துட்டில்லா புருசனுக்கும்
தோள் வலியக் கொடுக்காம

என்னங்க நாடு இது
எழவெடுத்த ஆட்சி இது
பொட்டுன்னு போனாலும்
பொத குழியும் கிடைக்காம

போறது பொருளா? உசுரா?
புரிஞ்சிக்க முடியலைங்க
பாரத மாதாவான்னு
பிரிச்சிப்பாத்து வெளியிடுங்க!

நன்றி: யுவபாரதி 

Tuesday, July 12, 2016

பஞ்சபூத ஸ்தலங்கள்


நிலம் - காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோவில் 

நீர் - திருவானைக்காவல் - ஜம்புகேசுவரர் கோவில் 

நெருப்பு - திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோவில் 

காற்று - திருகாளஹஸ்தி - காளத்தீஸ்வரர் கோவில் 

ஆகாயம் - சிதம்பரம் - தில்லை நடராஜர் கோவில்

Saturday, June 4, 2016

முதலுதவி பொருட்கள் விற்கும் சாதனம்

14 வயது சிறுவன் டெய்லோர் ரொசந்தல் (Taylor Rosenthal).... அடுத்த பில்கேட்ஸ் என்றால் நம்ப முடிகிறதா?

அப்படி அச்சிறுவன் சாதித்ததுதான் என்ன ........தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கிறதா ... வாருங்கள் பார்ப்போம்


அச்சிறுவனுக்கு பேஸ்பால் விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. அவ்வாறு விளையாடும்பொழுது தனக்கோ அல்லது தன்னுடன் விளையாடுபவர்களுக்கோ காயமோ ..சிராய்ப்போ ஏற்படுவதுண்டு. ஒவ்வொறு முறையும் அருகிலுள்ள கடைக்கோ அல்லது மருந்து கடைக்கோ சென்று முதலுதவி பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. இதை கவனித்த இச்சிறுவன், முதலுதவிப் பொருட்களை ATM போன்று பணம் செலுத்தி உடனுக்குடன் கிடைப்பது போல் பண்ணினால் அனைவருக்கும் உபயோகமாகுமே என்று எண்ணி இதை வடிவமைத்து அதற்கு காப்புரிமையும் பெற்று விட்டான்.  

தற்பொழுது ரெக்மெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதை பிரபலப் படுத்தியதன் மூலம் இரண்டு இலட்சம் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை பெற்றிருக்கிறது அந்நிறுவனம். மேலும் நிறைய கேளிக்கை பூங்காக்களில் இச்சாதனத்தை நிறுவ முதலீடு செய்திருக்கிறார்கள். 

இப்ப புரியுதா....இச்சிறுவன் அடுத்த பில்கேட்ஸ் என்று.... நாமும் நம் இளைய தலைமுறையை ஊக்கப்படுத்துவோம்.

Sunday, May 22, 2016

முடக்கத்தான் கீரை


முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். மழை காலங்களில் மட்டுமே கிடைக்கும் கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோருடைய வீட்டு கொல்லைப் புறங்களிலும் இது படர்ந்து கிடக்கும்.

கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதனால் இக்கீரைக்கு முடக்கு + அற்றான் = முடக்கற்றான் என்ற காரணப் பெயர் வந்தது. இதுவே நாளடைவில் மருவி முடக்கத்தான் என்று அழைக்கப் படுகிறது. இதனுடைய தாவரப் பெயர் கார்டியோஸ்பெர்மம் ஹலிக்காகேபம் (Cardiospermum helicacabum) என்பதாகும். இதை ஆங்கிலத்தில் பலூன் வைன் (Balloon vine) என்றும் அழைப்பார்கள். 

இதனுடைய மருத்துவ குணத்திற்கு காரணம் இதில் பொதிந்துள்ள வேதிப் பொருள்கள் ஆகும். அவையாவன அபிஜெனின் (Apigenin), லூட்டியொலின் (Luteolin), கார்டியோஸ்பெர்மின் (Cardiospermin), ஸ்கொபாலெடின் (Scopoletin), அம்பெல்லிபெரோன் (Umbelliferone) மற்றும் பல.




முடக்கத்தான் கீரையை மாதம் இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சிறிது கசப்பு சுவையுடையது, ஆனால் சமைத்து சாப்பிட்டால் இதன் கசப்பு சுவை அவ்வளவாக தெரியாது. இதை உணவில் தோசையாகவோ அல்லது துவையல் செய்தோ சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இக்கீரை மூட்டுகளில் தங்கியிருக்கும் யூரிக் ஆசிட் (Uric acid) என்ற காரணியை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். அவ்வாறு செய்யும் பொழுது உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உப்புக்களை தங்க வைத்து விடுகிறது, அதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

முடக்கத்தான் கீரையை கொதிக்க வைத்து உண்ண வேண்டாம், ஏனெனில் கொதிக்க வைக்கும் பொழுது அதிலுள்ள மருத்துவகுண வேதிப்பொருள் அழிந்துவிடும்.