Sunday, May 22, 2016

முடக்கத்தான் கீரை


முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். மழை காலங்களில் மட்டுமே கிடைக்கும் கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோருடைய வீட்டு கொல்லைப் புறங்களிலும் இது படர்ந்து கிடக்கும்.

கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதனால் இக்கீரைக்கு முடக்கு + அற்றான் = முடக்கற்றான் என்ற காரணப் பெயர் வந்தது. இதுவே நாளடைவில் மருவி முடக்கத்தான் என்று அழைக்கப் படுகிறது. இதனுடைய தாவரப் பெயர் கார்டியோஸ்பெர்மம் ஹலிக்காகேபம் (Cardiospermum helicacabum) என்பதாகும். இதை ஆங்கிலத்தில் பலூன் வைன் (Balloon vine) என்றும் அழைப்பார்கள். 

இதனுடைய மருத்துவ குணத்திற்கு காரணம் இதில் பொதிந்துள்ள வேதிப் பொருள்கள் ஆகும். அவையாவன அபிஜெனின் (Apigenin), லூட்டியொலின் (Luteolin), கார்டியோஸ்பெர்மின் (Cardiospermin), ஸ்கொபாலெடின் (Scopoletin), அம்பெல்லிபெரோன் (Umbelliferone) மற்றும் பல.




முடக்கத்தான் கீரையை மாதம் இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சிறிது கசப்பு சுவையுடையது, ஆனால் சமைத்து சாப்பிட்டால் இதன் கசப்பு சுவை அவ்வளவாக தெரியாது. இதை உணவில் தோசையாகவோ அல்லது துவையல் செய்தோ சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இக்கீரை மூட்டுகளில் தங்கியிருக்கும் யூரிக் ஆசிட் (Uric acid) என்ற காரணியை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். அவ்வாறு செய்யும் பொழுது உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உப்புக்களை தங்க வைத்து விடுகிறது, அதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

முடக்கத்தான் கீரையை கொதிக்க வைத்து உண்ண வேண்டாம், ஏனெனில் கொதிக்க வைக்கும் பொழுது அதிலுள்ள மருத்துவகுண வேதிப்பொருள் அழிந்துவிடும்.

No comments: