Tuesday, May 17, 2016

நெய்

'
"நெய்யில்லா உண்டி பாழ்" என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும்.

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட நெய் எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.



பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்கு பின் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து விடும். இதனை சட்டியில் வைத்து காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரிந்து, வாசனை உண்டாகும். இதுவே நெய்யாகும். இதனை வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். 

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருந்து கெடாமல் பாதுகாக்க நெய்யை பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு தேக்கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

மொத்த கொழுப்பு = 99.5%

நிறைவுற்ற (பூரித) கொழுப்பு அமிலம் (Saturated Fatty Acids) = 77-81%
ஒற்றை அபூரித கொழுப்பு அமிலம் (Mono Unsaturated Fatty Acids) = 16-17%
நிறைவற்ற (அபூரித) கொழுப்பு அமிலம் (Poly Unsaturated Fatty Acids) = 3-6%




ஒமேகா கொழுப்பு அமிலம் (ω -fatty acids) என்றால் என்ன?

கொழுப்பு அமிலத்தில் முதல் கார்பன் அணு முனை ஒமேகா என்று அழைக்கப்படும். அபூரித இணைப்பு எந்த கார்பன் அணுவில் ஆரம்பிக்கிறதோ அந்த எண்ணை குறித்து பெயரிடப்படும். 


நெய்யை எவ்வாறு உணவில் பயன்படுத்த வேண்டும்?

"நெய் உருக்கி மோர் பெருக்கி ....."

நெய்யை இளஞ்சூட்டில் நன்றாக உருக்கி சுடுசாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து சூட்டை தணிக்கும். மலச்சிக்கலை போக்கும். வாத பித்த கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
  • ஞாபக சக்தியை தூண்டும் 
  • சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும் 
  • கண் பார்வையை கூட்டும்   
குடற்புண் குணமாக 

குடற்புண் என்பது சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருந்தாலோ அல்லது பட்டினி கிடந்தாலோ ஏற்படும். குடலில் உள்ள ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புற சுவரை புண்ணாக்கி விடுகிறது. மேலும் வாயு கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்து கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை பொருள் உபயோகிப்பவர்களுக்கும், அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் குடற்புண் உண்டாகிறது. இதனால் வாயிலும் புண் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இது போன்ற உபாதை உள்ளவர்கள், நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடற்புண் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும் மற்றும் மலச்சிக்கல் நீங்கும், ஜீரண சக்தியை தூண்டும்.

No comments: