இத்தாவரம் யானை நெருஞ்சில் அல்லது யானை வணங்கி என்று அழைக்கப்படும். இதில் இருக்கும் முட்களைப் பார்த்து யானைகள் பயப்படும் என்பதனால் இப்பெயர் பெற்றது.
இந்த மூலிகைச் செடி பயிர் நிலத்தில் நன்றாக வளரக்கூடியது, களை என்று தான் சொல்வோம், ஆனால் இதில் அளப்பரிய மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் இலை சதைப் பாங்காக இருக்கும். தண்ணீரில் போட்டால் அந்த நீர் உடனே கெட்டித்தன்மை ஆவதை பார்க்கலாம். இச்செடியில் உள்ள காய், பூ, இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவத்திற்கு உபயோகமாகும். அதனால்தான் இச்செடியை காயகல்ப மூலிகை என்று சொல்வார்கள்.
பொதுவாக தமிழ் நாட்டில் இம்மூலிகையை சிறுநீரகக் கல்லை கரைப்பதற்குக் கொடுப்பார்கள். இச்செடியின் சாற்றை 8 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் கல் கரைந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.
எப்படி தயாரித்து சாப்பிடுவது?
- யானை நெருஞ்சில் செடியை சமூலமாகவும், அத்துடன் மூச்சிரட்டை செடி (ஒரு கைப்பிடி அளவு) மற்றும் சிறுகண் பீளை (ஒரு கைப்பிடி அளவு) மூன்றையும் நன்றாக அரைத்து அதில் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து 500மிலி ஆனவுடன் இறக்கி விடவும். இளஞ்சூட்டில் வடிகட்டி, பெரியவர்கள் 250மிலி காலை மாலை என இரு வேளை தொடர்ந்து 8 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அதன் பலனை நன்றாக உணர்வீர்கள்.
- யானை நெருஞ்சில் இலையை புளிச்ச நீரில் (பழைய சோற்று நீர்) ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த புளிச்ச நீரை குடித்தால் இதே பயனை அடையலாம்.
- வீட்டில் ரசம் பண்ணும்பொழுது அதில் இச்செடியின் இலைகளை போட்டுத் தயாரித்தால் அதற்கு பெயர் யானை நெருஞ்சில் ரசம். இதுவும் சிறுநீர் கல்லைக் கரைப்பதற்கு மிகவும் பயன்படும்.