கறிவேப்பிலை மரத்திற்கு கறிவேம்பு என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இம்மரத்தின் அனைத்து பாகங்களும் (இலை, பட்டை, வேர்) மருத்துவத்திற்கு பயன்படுகிறது. கறிவேப்பிலையை நாம் தினமும் சமையலுக்கு உபயோகிக்கிறோம் ஏனெனில் அதில் அதிக நோய் எதிர்ப்பு காரணிகள் உள்ளன.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முராயா கோனிகி (Murraya koenigii) என்று அழைக்கப்படும். இது ரூட்டேசியே (Rutaceae) என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் மருத்துவ குணத்திற்கு அதில் பொதிந்துள்ள பல மருத்துவ குண வேதிப்பொருட்கள் காரணம் ஆகும், அவை கரொட்டினாய்ட்ஸ் (Carotinoids - Lutein; Carotenes), அல்க்லாய்ட்ஸ் (Alkaloids - Carbazole alkaloids), வைட்டமின்கள், மணம் தரக்கூடிய டேர்பின்ஸ் (Terpenes) மற்றும் பல.
கறிவேப்பிலையை தினமும் பச்சையாக சாப்பிட்டால் வரும் பயன்கள்:
நீரழிவு நோய்
நீரழிவு நோய் கண்டவர்கள் தினமும் 10 கறிவேப்பிலையை பச்சையாக காலை மாலை என 3 மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும். மேலும் இந்நோயால் உடல் பருமனாவதும் தவிர்க்கப்படும். சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும் மற்றும் கண் பார்வை குறைபாடு உண்டாகும். இதை சரி செய்வதற்கு கறிவேப்பிலையை நிழலில் காய வைத்து பொடி செய்து கஷாயம் பண்ணி காலை மாலை என இரு வேளை குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக வைத்திருக்க உதவும்.
கொழுப்பு சத்து
கொழுப்பில் நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என இரு வகைப்படும். நம் உடம்பில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமானால் அது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீர் கோளாறுகளை உண்டு பண்ணும்.
காலையில் 15 கறிவேப்பிலையை பச்சையாக 3 மாதம் சாப்பிட்டால் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு சத்து குறைந்து பார்ப்பதற்கு அழகான உடல் பொலிவு ஏற்படும். நம் உடம்பில் கொழுப்பு சத்து ஏற்பட முக்கிய காரணம் நாம் தற்சமயம் உபயோகப்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். அதனால் எண்ணெய் உபயோகப்படுத்தும் முன்பு 1 லிட்டர் சமையல் எண்ணெயில் 10 கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயிலுள்ள கொழுப்பு சத்து நீங்கும்.
இரத்தச்சோகை
இரத்தச்சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் பேரீச்சம் பழத்துடன் கறிவேப்பிலையை சேர்த்து உண்டால் இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் அதிகமாகி இரத்தச்சோகை நீங்கும்.
நரைமுடி
கறிவேப்பிலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வந்தால் நரைமுடி வராது மேலும் முடி உதிர்தலையும் தடுத்து நிறுத்தும்.
கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம் ..?
கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் (Lipophilic compounds) முழுமையாக உடலில் சேரும். கறிவேப்பிலையை தாளிக்கும்போது இளஞ்சூடான எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள மோனோ டேர்பீன்ஸ் ஆவியாகி பலன் கிடைக்காமல் போய் விடும்.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்பு சத்தும் (Calcium), இரும்பு சத்தும் (Iron) அதிக அளவு நிறைந்துள்ளன.